வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும்.
நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும்.
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களை அடக்கி ஒடுக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு கொண்டு வரப்படுகின்றதென தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் வதந்திகளை நாம் அடியோடு மறுக்கின்றோம்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட பின்னர்தான் அது தொடர்பான கருத்துக்களை வெளியிடமுடியும்.
சட்டவரைவில் திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும். அதைவிடுத்து அந்த சட்டவரைவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதும் ஹர்த்தால் நடத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.