பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கு முன்னரும் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக்கொள்ளும் வகையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவண்ண, சாந்த பண்டார, கலாநிதி சுரேன் ராகவன், ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகிக்கும் அதேவேளை, ஏனையவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்டு வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.