ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு கடனை வாங்கும் போது, வாங்கிய கடனை கையாளும் முறைகள், கடனை செலுத்தும் முறை ஆகியவற்றை முறையாக கையாள வேண்டும் எனவும், அப்போதுதான் அந்த நாடு உலகில் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டை உலகத்தின் முன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக சில அரசியல் குழுக்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுவதாகவும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கையில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.