நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், அத்தகைய நடத்தைக்கு தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுகின்றது, 21ஆம் நூற்றாண்டுக்கு உகந்த கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு அனைவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்
எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிடத் தயாராக இருக்கின்றது, நாட்டின் மிக முக்கியமான தேசிய வளம் இளைஞர்கள், அவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கையை இந்து சமுத்திரத்திரத்தில் பிரதான கேந்திர மையமாக மாற்ற முடியும்.
காலநிலை மாற்றத்தை ஒரு பாடமாக மாற்றவும், புதிய வரலாற்று நிறுவனத்தை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாடசாலை பாடத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக கல்வியில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். அத்தோடு அனைத்து மாணவர்களும் அறிவியல் மற்றும் கலை பாடங்களை படிக்க வேண்டும்.
மேலும், புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், முதலில் உயர்தரப் பாடங்கள் நடைபெறும் அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும் என்றும், அதன்பின்னர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும்.
எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கும் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்.