நாட்டில் தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பை தடுக்க போதிய கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஆலோசகரும் குழந்தை மருத்துவருமான டொக்டர் தீபால் பெரேரா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
நெற்செய்கை, வீதி அமைத்தல், பாடசாலை மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் விளையாடுதல், படைகளால் நடத்தப்படும் பயிற்சி அமர்வுகள், விளையாட்டுப் போட்டிகள்,
புத்தாண்டு விளையாட்டு அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் நிகழ்வு போன்றவற்றில் மக்கள் ஈடுபடும் போது அதிகளவு நீரை பருக வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குழந்தைகளுக்கும் அதிகளவில் தண்ணீர் வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதுமான திரவங்கள் மற்றும் தாதுக்களை எடுத்துக்கொள்ளத் தவறினால் சோர்வு, தலைவலி, அயர்வு, வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை, அதிகரித்த தூக்கம் மற்றும் பசியின்மை போன்ற முக்கியமான உடல் நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கடும் வெப்பம் நிலவுகிறது.
இந்தக் காலகட்டத்தில் மக்கள் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். மக்கள் இயற்கையான திரவங்களான தேங்காய் தண்ணீர் மற்றும் ஆரஞ்சு சிறிதளவு உப்பு கலந்து அருந்துவது தாகத்தை தணிக்கும் திரவங்களாகும்.
இது உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள், குறிப்பாக குழந்தைகள் தேவையில்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் செல்ல வேண்டாமென்றும் இது கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துமென்றும் இது வெப்ப பக்கவாதத்துக்கு வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.