வெடுக்குநாறி மலையில் மீண்டும் பூசைகள் தொடங்கியுள்ளன.இது நீதிமன்றத்தில் சுமந்திரனுக்கு கிடைத்த வெற்றியாக அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகின்றது.அதேசமயம் அவருடைய அரசியலை விமர்சிப்பவர்கள் அதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள்.
“ஒரு வழக்கில் எதிரி தரப்பு ஆட்சேபனை இல்லை என்றால் அந்த வழக்கில் வழக்காளி தரப்பு தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவது சட்டத்தரணியின் திறமையினால் அல்ல.வெடுக்குநாறி மலையில் தொல்பொருள் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காதபோது அதற்காக ஆணையைப் பெற்றதை சிலர் வெற்றியாக காட்ட முனைகின்றார்கள். அந்த திணைக்களத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அது சரி, திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர்களால் ஆலய வளைவு இடித்தழிக்கப்பட்ட வழக்கில் அதே சட்டத்தரணி இந்து ஆலயத்திற்காக ஆஜராகி என்ன நடந்தது என்பதையும் பெருமையாக எழுதவேண்டாமா?” என்று ஓர் ஊடக முதலாளி முகநூலில் எழுதியுள்ளார்.அவருடைய குறிப்புக்கு கீழே ஈழத்து சிவசேனையின் தலைவர் மேலதிகமாக சுமந்திரனை விமர்சித்து எழுதியுள்ளார்.
வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சுமந்திரன் பெற்ற வெற்றி எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் சுமந்திரன் ஒரு தொழில்சார் அரசியல்வாதிக்குரிய முதிர்ச்சியோடு நடந்து கொள்கிறார் என்பதனை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.வெடுக்குநாறி மலை விவகாரத்தில் அந்தக் கோயிலோடு சம்பந்தப்பட்டு ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்ட ஒருவர் ஊடகத்துறையைச் சேர்ந்தவர். அவர் முன்பு சுமந்திரனின் அரசியலுக்கு எதிரான தரப்புகளோடு வேலை செய்தவர். ஆனால் அவர் கைது செய்யப்பட்ட பொழுது சுமந்திரன் தானாக முன்சென்று அந்த வழக்கைக் கையில் எடுத்தார்.
அதுபோலவே பண்ணை அம்மன் சிலை விவகாரத்திலும் அவர் தானாக முன்வந்து வழக்கைக் கையில் எடுத்தார். அதுபோல வேறு பல வழக்குகளிலும் சுமந்திரன் தனது அரசியல் விரோதிகளுக்குத் தானாக முன்வந்து உதவி புரிந்துள்ளார்.இந்த வழக்குகளில் அவர் ஒரு தொழிற்சார் அரசியல்வாதிக்குரிய முதிர்ச்சியோடு நடந்து கொள்கிறார். அதாவது எதிரிகளின் எண்ணிக்கையை குறைப்பது.உதவிகளின்மூலம் நண்பர்களைச் சம்பாதிப்பது.அல்லது எதிரிகளை நண்பர்கள் ஆக்குவது. ஒருவர் தன்னிடம் உள்ள அறிவை அது தேவைப்படும் இடத்தில் அல்லது ஆபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு தானாக முன்வந்து இனாமாகக் கொடுப்பது என்பது ஒரு நற்செயல்தான். சுமந்திரன் அதைச் செய்கிறார்.
மேலும்,அவரை விமர்சிக்கும் ஒரு பகுதியினர் அவருடைய மதப் பின்னணியைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதுண்டு. ஆனால் அவர் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராக இருந்தபோதிலும் இந்து ஆலயங்கள் மற்றும் இந்துச் சிலைகள் தொடர்பில் தானாக முன்வந்து வழக்குகளைக் கையில் எடுக்கிறார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியத்தின் மதப் பல்வகைமையை அவர் ஏதோ ஒரு விதத்தில் பாதுகாக்கின்றார். அதுவும் ஒரு நற் செயல்தான்.
இந்துச் சிலைகள் தொடர்பான வழக்குகளில் மட்டுமல்ல, நீர் கொழும்பில் 2015 ஆம் ஆண்டு கத்தோலிக்கர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே ஒரு சிலை தொடர்பாக பிணக்கு ஏற்பட்ட பொழுது அதில் கத்தோலிக்கர்கள் சார்பாக சுமந்திரன் வழக்கைக் கையில் எடுத்தார். எனவே இந்த விடயத்தில் அவர் ஒரு தொழில் சார் வழக்கறிஞராகவும் செயற்படுகிறார். அதேசமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதை ஒரு தொண்டாகவும் செய்ய முன்வருகிறார்.
அதைத் தொண்டு என்று கூறுவதைவிடவும் கடமை என்று கூறுவது அதிகம் பொருத்தமாக இருக்கலாம்.ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடமை அது.சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவர் அந்த இடத்தில் அதைத்தான் தனது வாக்காளர்களுக்கு செய்யலாம்.அவர் அவ்வாறு செய்வது தன்னுடைய விசுவாசிகள் கூட்டத்தை பெருக்கிக் கொள்ளும் அரசியல் நோக்கத்தோடுதான் என்று ஒரு வியாக்கியான முன்வைக்கப்படலாம்.கடந்த 13 ஆண்டுகளாக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக,கட்சிகளையும்,கட்சிக்குள் தம்முடைய ஸ்தானத்தையும், தம்மைச் சுற்றி விசுவாசிகள் கூட்டத்தையும் கட்டியெழுப்ப முற்படும் அரசியல்வாதிகளின் பின்னணிக்குள் வைத்து பார்க்கும்பொழுது, ஓர் அரசியல்வாதி விசுவாசமாக ஒரு தொண்டைச் செய்தாலும்கூட அதை சந்தேகிக்ககூடிய ஒரு தமிழ் தேசிய சூழல்தான் அரங்கில் உண்டு.
மேலும் வெடுக்குநாறிமலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றியைக் குறித்து பெரிய அளவிற்கு கொண்டாடவும் முடியாது. ஏனென்றால் அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் தையிட்டிப் பகுதியில் தனியார் காணியில் உயரமான ஒரு தாது கோபம் கட்டப்பட்டு அதற்கு கலசமும் வைக்கப்பட்டிருக்கிறது.இந்துக்களின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகிய நகுலேஸ்வரத்துக்கு அருகே அந்தத் தாதுகோபம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. ஒருபுறம் வெடுக்குநாறிமலை விவகாரத்தில் நீதி கிடைக்கின்றது.அதோடு, கச்சதீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னொருபுறம் தையிட்டியில் யாழ்ப்பாணத்தின் மிக உயரமான விகாரைக்கு கலசம் வைக்கப்பட்டிருக்கிறது.
இது அரசாங்கத்தின் தந்திரமான அணுகுமுறையை காட்டுகின்றதா? ரணில் விக்கிரமசிங்க சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டப் போவதாக அறிவித்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.சிங்கள பௌத்த மயமாக்கலைப் பொறுத்தவரை ராஜபக்சக்கள் வெளிப்படையான இனவாதிகள்.ஆனால் ரணில் விக்கிரமசிங்க லிபரல் முகமூடிக்குப் பின் பதுங்குபவர்.எனவே இதுவிடயத்தில் நீதிமன்றங்களில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து விவகாரத்தை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும் சுருக்கக் கூடாது. சிங்கள பெளத்த மயமாக்கல் எனப்படுவது ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அதைவிட ஆழமான பொருளில் அது ஒரு அரசியல் விவகாரம். அதை அரசியல் போராட்டங்களின் மூலம்தான் எதிர்கொள்ள வேண்டும்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதை அரசுக்கு எதிரான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
நிச்சயமாக கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போன்ற ஒரு நாள் போராட்டங்கள் சிங்கள பௌத்த மயமாக்கலைத் தடுத்து நிறுத்தப் போதுமானவை அல்ல.மாறாக தொடர்ச்சியான போராட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும்.அண்மையில் சுகந்திரன் சட்டமறுப்புப் போராட்டத்தை குறித்து பிரஸ்தாபித்திருந்தார்.நல்ல விடயம். ஆனால் அதை நாடாளுமன்ற வெற்றுப் பிரகடனமாகச் சுருக்காமல், நடைமுறையாக மாற்ற வேண்டும்.சட்டம் மறுப்பு என்பது சிறை இருப்பும்தான். அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் வீராவேசமாக பேசுவதும்,சுழலும் சொற்போர்களை நடத்துவதும் யூ ரியூப் ரசிகர்களைக் கவர உதவக்கூடும்.அல்லது சுழலும் சொற்போர்களையும் பட்டிமன்றங்களையும் பார்த்து ரசிக்கும் மக்களைக் கவரக்கூடும். ஆனால் நடைமுறையில் அவை கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு புத்த விகாரையில் இருந்து ஒரு செங்கல்லைக்கூட கழட்டி எடுக்க முடியாத உரைகள்.
அண்மையில் சாணக்கியனுக்கும் அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் ஏற்பட்ட நாடாளுமன்ற மோதலும் அத்தகையதே. தமிழ் மக்கள் அதைவிடப் பயங்கரமான மோதல்களையெல்லாம் கடந்துவந்து விட்டார்கள்.இந்த மோதல்களால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும் ?
எனவே சுமந்திரன் தான் அறிவித்த சட்டமறுப்பு போராட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.அரசியலைச் சட்டக் கண் கொண்டு மாட்டும் பார்ப்பதில் இருக்கக்கூடிய ஆழமற்ற தன்மைகளையும் தோல்விகரமான அணுகுமுறைகளையும் குறித்து நான் எனது கட்டுரைகளில் அதிகமாக எழுதியிருக்கிறேன். கடந்த 13 ஆண்டுகளாக எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் அவ்வாறு சட்ட மறுப்பாகப் போராடியது இல்லை.நாடாளுமன்றத்தில் தமக்குள்ள சிறப்புரிமையை பயன்படுத்தி சில வீரதீர செயல்களில் ஈடுபட்டதற்கும் அப்பால், எந்த ஒரு அரசியல்வாதியும் தன்னை ஒறுத்துப் போராடத் தயாராக இருக்கவில்லை.
உதாரணமாக,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியின் தொடக்க நாளில் அம்பாறையில் சாணக்கியன் போலீசாரோடு தள்ளுமுள்ளுப்பட்டது அந்தப் போராட்டத்திற்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ஆனால் அங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய காட்சி என்னவென்றால்,தனக்கு பாதுகாப்பாக நிற்கும் எம்.எஸ்.டி மெய்க்காவலர்களின் பின்னணியில்தான் சாணக்கியன் தன்னைத் தடுத்து நிறுத்திய போலீசாரை முட்டித் தள்ளுகிறார்.அரசாங்கத்தின் ஒரு தரப்பு அவருக்கு மெய்க்காவலாக நிற்கின்றது,இன்னொரு தரப்பு அவருடைய அசைவுகளைத் தடுக்கின்றது.
இப்படித்தான் இருக்கிறது தமிழரசியலில் சட்டமறுப்புப் போராட்டம். அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் போலீசாரோடு தள்ளுமுள்ளுப்பட்டார். சாணக்கியனிடமிருந்து அவர் வித்தியாசப்படும் இடம் அவருக்கு எம்.எஸ்.டி மெய்க்காவலர்கள் இல்லை என்பது. போலீசார் அவரைக் கைது செய்தார்கள். எனினும் ஓர் இரவுக்குள் அவர் விடுவிக்கப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள்ள சிறப்புரிமையின் பிரகாரம் ஒரு கட்டம்வரை துணிச்சலாகப் போராடலாம்.அதுதான் நாட்டில் நடக்கின்றது. அந்த சிறப்பு உரிமையும் கேள்விக்கு உள்ளாகும் விதத்தில் தம்மை அர்ப்பணித்து, ரிஸ்க் எடுத்துப் போராட எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார் ?
கிராம்சி கூறுவதுபோல நாடாளுமன்றம் ஜனநாயகம் என்பவையெல்லாம் ஒரு கட்டம் வரையிலும்தான்.தன்னுடைய இருப்புக்கு ஆபத்து என்று கருதும் பொழுது அரசாங்கம் படைகளை ஏவும். நாடாளுமன்றத்தின் மறைவில் ஒழிந்து நிற்கும் கவச வாகனங்கள் அப்பொழுது முன்னுக்கு வரும்.அதுதான் அரகலய போராட்டத்திற்கு நடந்தது.
ஓர் எல்லைக்கு மேல் சட்ட மறுப்பாக போராடத் துணியின் சுமந்திரனுக்கும் அதுதான் நடக்கும்.அதை எதிர்கொள்ளும் துணிச்சல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டா?அல்லது விவகாரத்தை சட்டப் பிரச்சினையாகக் குறுக்கி நீதிமன்றங்களில் பெறும் வெற்றிகளை முகநூலில் கொண்டாடப் போகின்றார்களா?