கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆளும் தரப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைதிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும், இதற்கு யார் பணம் செலவழித்து ஆதரவு அளித்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சூழ்நிலைகளின் போது முப்படையினரும் மௌனமாகச் செயற்பட்டது ஏன் என்பதும் அவர்களுக்கு யார் உத்தரவு பிறப்பித்தது என்பதும் கேள்விக்குறியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை தூண்டி விட்டு நாட்டின் சகல செயற்பாடுகளையும் சீர்குலைத்த அந்தக் காலகட்டம் தொடர்பான உண்மைத் தகவல்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை இவ்வாறான நிலைக்குத் தள்ளும் நபர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.