சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் வரையில் எதிர்காலத்தில் அரசியல் கூட்டணியில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “சுதந்திர கட்சியின் தலைமையிலேயே அடுத்து ஆட்சி அமைக்கப்படும். அதற்கு எவரது தயவும் எமக்கு தேவையில்லை. எவருக்கேனும் எமது தோழமை வேண்டும் என்றால் எம்மோடு இணைத்து கொள்ளலாம்.
எமது ஆட்சிக்கு தேவையான பல கொள்கைகள் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளன, எமது ஆதர்வு இல்லாமல் எந்த கட்சியாலும் இலங்கையில் இனிமேல் ஆட்சியமைக்க முடியாது.
ஒற்றுமையின் ஊடாகவே நாட்டை அபிவிருத்தியடைச் செய்ய முடியும் ஆகவே அனைத்து இன மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். முட்டாள் தனமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த கூடாது.
இதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புக்கள் அவசியமாகும். அவர்கள் எமது இறையான்மையில் தலையிடாமலும் நாட்டை பிளவுபடுத்தாத வகையிலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும் நாட்டில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் அரசியலமைப்பு ஒன்று அவசியம். அத்தோடு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாங்கமும் வேண்டும். அதனை நாம் உருவாக்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.