மே தினக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவிற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து பொதுஜன பெரமுனவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக காட்சிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பதாகையில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பசில் ராஜபக்ஷவின் படம் காட்டப்பட்டிருந்தது.
இதனை கட்சியின் நன்மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக கருதுவதால், இந்த விடயம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஆட்சேபணைகள் எழுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கோட்டாபய ராஜபக்சவின் படம் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவரது படம் அகற்றப்பட்டது.
இந்நிலையில் மே தின மேடையில் பசிலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என மூத்த உறுப்பினர்கள் ஆட்சேபனையை எழுப்பியுள்ளதோடு ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இரட்டைக் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், கட்சியின் அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை நியமிப்பதற்கான பிரச்சாரம் சில உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பசிலின் தலையீட்டினால் உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலகியுள்ளதாகவும், தலைமை மாற்றம் ஏற்பட்டால் அது கட்சியில் பிளவுக்கு வழிவகுக்கும் எனவும் மூத்த உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.