ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
அதன்படி மின்சார கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்சார உற்பத்தி தரவுகள் மற்றும் விற்பனை தரவுகள், எரிபொருள், நிலக்கரி மற்றும் இதர மூலப் பொருட்களின் விலைகள் மற்றும் இந்த ஆண்டுக்கான மின்சார உற்பத்தித் திட்டம் மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜனவரி முதலாம் திகதி மற்றும் ஜூலை முதலாம் திகதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான முன்மொழிவை சமர்பித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை டீசல், பெற்றோல், நிலக்கரி போன்றவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மின்சாரத் தேவையும் சுமார் 18 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆகவே தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை சுமார் 20 வீதத்தால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.