மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.
மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் கடந்தவாரம், நீதிமன்ற உத்தரவின்பேரில் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், சடலம் மீது தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் சடலம் தொடர்பான மேலதிக பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் செல்லும் எனவும் இந்த அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பு தொடர்பாக தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஷாப்டரின் சடலம் கடந்த 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.
பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் ஷாப்டர் அன்றைய தினம் இரவு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.