உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஜூன் மாதம் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதமாகி எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதியுடன்மூன்று மாதங்கள் நிறைவடையவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அனைத்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களும் தேர்தலை நடத்துமாறு கோரி ஜூன் 08 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒன்று கூடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களிலும் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்த அதேவேளை இறுதியாக கொழும்பில் பாரிய மக்கள் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அனைத்து குடிமக்களும் வாழ்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அதற்கான சவாலை ஏற்றுக்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.