நாட்டிற்கு அன்னியச் செலாவணியை எளிதில் பெறக்கூடிய மாணிக்கல் மற்றும் ஆபரணத்துறையில் நிலவி வரும் அதிகாரிகள்வாதம் முதலில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத்துறை தொடர்பாக நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, மாணிக்கக்கற்கள் தொழில் சார்ந்து ஈடுபட்டுள்ள வர்த்தகர்களின் தற்போதைய நிலை குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இலங்கை இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையானது, வர்த்தக ஊக்குவிப்பாளராகவும்,சேவை நலன் வழங்குபவராகவும் புனரமைக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.