ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று மழையுடனான கால நிலைமை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தில் மாலையில் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.