மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப் பிரமாண்டமாக விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு விழா இன்று ஆரம்பமாவதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.