கிழக்கு மாகாணத்தில் 16 ஆயிரத்து 700 குடும்பங்கள் மின்சார வசதியற்ற நிலையில் தொடர்ச்சியாக வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆளுனரின் வருகையின் முதல் சந்திப்பாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுனர் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட ஆளுனர், தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் இணைந்து பயணிக்கவிரும்புவதாக இதன்போது தெரிவித்தார்.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டுவரும்போது உடனடி தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுனர். கிழக்கு மாகாணத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்றும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி உட்பட பல வளங்களை அபிவிருத்தி செய்வதால், ஒரே வருடத்தில் 10 பில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.