கஜேந்திரகுமார் எம் பி மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள முனைந்தமைக்கு கண்டனம் தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேள் செயற்பாடுகளையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னேடுக்கும் போது புலனாய்வாளர்களின் இடையூறுகள் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இவற்றை பொருட்படுத்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் காவலர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடும் வகையிலான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் புலனாய்வாளர்களை வைத்து செயற்படுத்த முனைவதானது தமிழ் மக்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை புடம்போட்டுக் காட்டுகின்றது.
இந்நிலையில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிக்கு தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் நாடாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறாத வகையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.