80 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சுங்கத்தினால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாமல் அவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக டி சில்வா முன்னிலையில் குறித்த பிரான்ஸ் பிரஜை நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
70 மில்லியன் ரூபாய் தண்டப்பணம் செலுத்த முடியாமைக்காக 35 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபரின் பயணப் பொதியில் 4 கிலோ கிராம் தங்கக் கட்டியை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த தங்கக் கட்டிகள் கறுப்பு பெயிண்ட் பூசி அலுமினியத் தாளில் சுற்றப்பட்டு பயணப் பொதியில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விசாரணையின் பின்னர், சுங்கத்துறையினர் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், இந்த பிரான்ஸ் நாட்டவருக்கு 70 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்தாததால் சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.