எரிவாயு விலை குறைவினால் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நிவாரணம் கிடைக்காது என்பதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
25 சதவீதத்திற்கும் குறைவான பேக்கரிகளே எரிவாயுவை பயன்படுத்தி தயாரிப்புகளில் ஈடுபடுவதாகவும் , மீதமுள்ளவை டீசல், விறகு மற்றும் மின்சாரத்தையே பயன்படுத்துவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனினும் எரிவாயு விலை அதிகரிப்பின் அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைகளை தாம் ஒருபோதும் அதிகரிக்கவில்லை என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.