ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மேற்கொண்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தை நோக்கி செல்லும் நுகேகொட – விஜேராம வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியை பொலிஸார் இரும்பு தடுப்பு வைத்து மூடி வந்திருந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள எதிர்ப்பு பேரணி கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை திறப்பது, மகாபொல உதவித் தொகையை அதிகரிப்பது, உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.