சுயநிர்ணய அடிப்படையில் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள இந்த நேரத்தில், தீர்வு என கூறிக்கொண்டு இழுத்தடிப்புகளை செய்தால் வெளியக சுயநிர்ணயத்தை கோர வேண்டி ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வேத சட்டங்களில் குறிப்பிட்டுள்ளதை போன்று வெளியக சுயநிர்ணயத்தை கோருவோம் என்றும் அவ்வாறானதொரு சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும் அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் முழுமையான திருப்தி கிடைக்கவில்லை என்றும் எவ்வாறாயினும் தீர்வுக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி கூறியிருந்த போதும் இதுவரை அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே பிரிக்கமுடியாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையிலான நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.