தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு நரி என்று வர்ணிப்பதுண்டு.அப்படியென்றால், ஒரு நரி என்ன செய்யும் என்று முன்கூட்டியே அனுமானித்து அதற்கு எதிராக தாங்களும் பதில் தந்திரங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.ஆனால் தமிழ்க் கட்சிகள் அவ்வாறான தந்திரங்களை வகுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இதற்கு ஆகப்பிந்திய உதாரணம் உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு. சில மாதங்களுக்கு முன்புவரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கப் போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பை அரசாங்கம் கட்டியெழுப்பியது.தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் அதை நம்பினவோ இல்லையோ தமிழ்க் கட்சிகள் அதை நம்பின. அதை நம்பியபடியால்தான் அதிக விலை கொடுத்து சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டின.இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் சுவரொட்டிகளை அச்சடிப்பதற்கு அதிக பணம் தேவை.ஆனால் எல்லாத் தமிழ்க் கட்சிகளுமே சுவரொட்டிகளை தயாரித்து ஆங்காங்கே ஒட்டின.ரணில் ஒரு நரி என்றால்,அவர் எப்படிச் சிந்திப்பார்? என்னென்ன பொய் சொல்வார்? என்று அவருடைய நடவடிக்கைகளைக் குறித்து ஒரு முன் அனுமானம் இருக்க வேண்டும். அவர் தேர்தலை அறிவித்த திகதியில் வைக்க மாட்டார் என்பதை ஏன் தமிழ்க் கட்சிகள் அனுமானிக்கத் தவறின? இந்த விடயத்தில் ரணில் தமிழ்க் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் பேயர்களாகிவிட்டார் என்பதே உண்மை. அப்படித்தான் இப்பொழுது பேச்சுவார்த்தை விடையத்திலும்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை வைப்பதை விடவும் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று காட்டப்படுகிறது. அது கூட ஒரு நாடகமாக இருக்கலாம். இடைக்கால நிர்வாக ஏற்பாட்டைக் குறித்து அதிகம் யோசித்தவர் விக்னேஸ்வரன். அவருடைய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம்தான் உண்டு. அவர் முன்வைக்கும் அந்த யோசனையை ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்பதும் சந்தேகமே. ஆனால் ரணில் இந்த விடயத்தில் இடைக்கால ஏற்பாடு ஒன்றைப் பற்றி கதைப்பதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க திட்டமிடுகிறாரா? என்ற சந்தேகம் உண்டு. தொகுத்துப் பார்த்தால் அவர் இப்போதைக்கு எந்த ஒரு தேர்தலையும் வைக்க மாட்டார் போல் தெரிகிறது. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வைப்பதுதான் அவருடைய முதன்மை இலக்காக தெரிகிறது.
அடுத்த ஆண்டின் இறுதிக்குள் அவர் ஜனாதிபதி தேர்தலில் வைக்க வேண்டும். அதற்கிடையில் தன் சொந்த கட்சியை பலப்படுத்த வேண்டும். சொந்தக் கட்சியை பலப்படுத்துவது என்றால் சஜித்தை உடைக்க வேண்டும். இது முதலாவது.
இரண்டாவது, தாமரை மொட்டின் ஆதரவோடு தேர்தலில் இறங்கினால், தமிழ் முஸ்லிம் வாக்குகளை வென்றெடுப்பதில் சவால்கள் ஏற்படக்கூடும். அவர் ராஜபக்சக்களின் பினாமி என்ற ஒரு பிம்பத்தை தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பினால் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு குறையும் என்று எதிரணி சிந்திக்கின்றது. எனவே முன்னைய தேர்தல்களைப்போல இம்முறை தமிழ் வாக்குகளை நம்புவதில் தனக்கு வரையறைகள் உண்டு என்று ரணில் சிந்திக்கமுடியும். இது இரண்டாவது.
மூன்றாவது சம்பிக்க ரணவக்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வரலாம் அல்லது அவர் தனியாக தேர்தல் கேட்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. சம்பிக்க ரணவக்க தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சி போராட்டங்களின் பங்காளிகளில் ஒருவர். அவருடைய 43-ஆவது பிரிகேட் எனப்படும் அமைப்பு கோட்டாகோ கோ கமவில் காணப்பட்ட அமைப்புகளில் ஒன்று. எனவே தன்னெழுச்சிப் போராட்டத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உண்டு. அதே சமயம் அவர் சிங்கள பௌத்த கடும்போக்குவாதத்தைப் பிரதிபலிப்பவர். எனவே சிங்கள பௌத்த கடும்போக்கு வாக்குகளில் ஒரு பகுதியையும் அவர் கவரமுடியும். அப்படிப் பார்த்தால் ரணிலுக்கு அவர் குறிப்பிடத்தக்க அளவுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடும்.
அதேசமயம்,சம்பிக்க கவரக்கூடிய வாக்குகள் பெருமளவுக்கு சஜித்துக்கு அல்லது ஜேவிபிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள்தான் ஏனெனில் அரக்கலவின் ஆதரவாளர்கள் ரணிலுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஜேவிபியின் ஆதரவாளர்களும் வாக்களிக்க மாட்டார்கள். அதேசமயம் யு.என்.பியின் வாக்கு வங்கியில் இருந்து பெரிய தொகையை கவர்ந்தெடுக்க சம்பிக்கவால் முடியாது. சிலசமயம் ராஜபக்சக்களின் வாக்கு வங்கியில் இருந்து ஒரு தொகுதியை அவர் கவர முடியும். எனவே சம்பிக்க தனியாகக் களமிறங்கினால் அது ரணிலுக்கு மட்டும் சவால் இல்லை எதிரணிக்கும் சவால்தான். இது மூன்றாவது.
நாலாவது,சஜித் தனது தலைமைத்துவத்தை நிரூபிப்பதற்காக இப்பொழுதும் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அவர் ரணிலுக்கு அதிகம் சவாலாக நிற்பார். அவரிடம் இருந்து முன்னாள் யு.என்பிக்காரர்களைக் கழட்டி எடுக்கக்கூடிய மட்டும் எடுத்தால்தான் அவரை ஒரு சவால் இல்லை என்ற நிலைக்குத் தள்ளலாம். இது நான்காவது.
ஐந்தாவது ஜேவிபி. தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் ஜேவிபியின் ஆதரவுத் தளம் முன்னரே விடப் பலமாகக் காணப்படுகின்றது. ஆனால் அதற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி வெற்றிபெறும் என்று பொருள் இல்லை. ஜேவிபி எதிர்க்கட்சிகளோடு இணைந்து ஒரு கூட்டை உருவாக்கினால் அது ஒப்பிட்டுளவில் ரணிலுக்கு அதிக சவால்களைக் கொண்டு வரும். ஆனால் தனது பலத்தைக் குறித்து ஜேவிபி மிகைமதிப்போடு காணப்படுவதாக தென்னிலங்கையில் உள்ள தொழிற்சங்கவாதிகள் கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒரு பலமான திரட்சியை உருவாக்க முடியாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். அதனால் ரணிலுக்கு அதிகம் சவால்களை கொடுக்கக்கூடிய ஒரு எதிர்க்கட்சிக் கூட்டை உருவாக்க முடியாதிருப்பது மட்டுமல்ல, ஜேவிபியும் அது கற்பனை செய்யும் வெற்றிகளைப் பெறப் போவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது ? அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனக்குப் பலமான எதிர்ப்பு இல்லை என்று ரணில் நம்பக்கூடிய நிலைமைகள் நாட்டில் உண்டு. ஜனாதிபதித் தேர்தலுக்கு இடைபட்ட காலத்தில், பொருளாதாரத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிமிர்த்துவாராக இருந்தால், ரணில் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.
ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிழமையும் ஏதோ ஒரு மாற்றத்தைக் காட்டி வருகிறார். மின்சார வெட்டு இப்பொழுது இல்லை. எரிவாயுத் தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் தட்டுப்பாடும் ஒப்பீடட்டளவில் குறைந்து விட்டது. பொருட்களின் விலை படிப்படியாக இறங்கி வருகின்றது. ஒவ்வொரு கிழமையும் ஏதோ ஒரு பொருளுக்கு அல்லது பல பொருட்களுக்கு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ விலைகள் குறைக்கப்படுகின்றன. இவையாவும் நடுத்தர வர்க்கத்தை கவரத்தக்க மாற்றங்கள். இந்த மாற்றங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக படித்த சிங்கள நடுத்தர வர்க்கம் மட்டுமல்ல படித்த தமிழர்களும் ரணிலை எதிர்பார்ப்போடு பார்ப்பதாகத் தெரிகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையே அவர் மேலும் திருப்பகரமான மாற்றங்களைக் காட்டுவாராக இருந்தால் அவருடைய வாக்கு வங்கி மேலும் பலமடையும்.
அவர் பலமடைவதை பன்னாட்டு நாணய நிதியமும் மேற்கு நாடுகளும் ஒரு விதத்தில் எதிர்பார்க்கின்றன என்றே தெரிகிறது. ஏனென்றால் இடது சாய்வுடைய ஜெவிபி அல்லது கடும்போக்கான சம்பிக்க போன்றவர்கள் பலமடைவதை விடவும் ரணில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை அவர்கள் விரும்பக் கூடும். மகா சங்கமும் அவரை ஆதரிக்கும். ஏனென்றால் அவர் உயர் குளாத்தைச் சேர்ந்தவர்.கொயிகம சாதியைச் சேர்ந்தவர். இப்போதிருக்கும் நெருக்கடிக்குள் பன்னாட்டு நாணய நிதியத்தைக் கையாளத்தக்க ஒரு தலைவர் என்றெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மகா சங்கம் அவரை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
அதை நோக்கித்தான் ரணிலும் உழைக்கின்றார். அண்மை மாதங்களாக தமிழ்ப் பகுதிகளில் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். சிங்கள பௌத்த வாக்காளர்களைச் சந்தோஷப்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளின்மூலம் ரணில் எதை நோக்கி உழைக்கின்றார்? அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை ராஜபக்சர்களோடு சேர்த்துக் காட்டினால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சி அடையும் என்பது அவருக்கு தெரியும். எனவே சிங்கள பௌத்த வாக்குகளையாவது ஆகக்கூடிய பட்சம் பாதுகாக்க வேண்டும் என்று அவர் திட்டமிடலாம். அந்த அடிப்படையிலும் கடந்த சில மாதங்களாக முடுக்கி விடப்பட்டிருக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலைப் பார்க்க வேண்டும்
இதுவிடயத்தில் அரசாங்கத்தின் சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் பன்னாட்டு நாணய நிதியமோ அல்லது மேற்கு நாடுகளோ நிபந்தனைகளை விதிக்கத் தவறியுள்ளன என்பதையும் தமிழ்மக்கள் தொகுத்துக் கவனிக்க வேண்டும். அதாவது உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளும் உலகப்பொது நிறுவனங்களும் தங்கள்தங்கள் நோக்கு நிலைகளில் இருந்துதான் இலங்கை விவகாரத்தை அணுகுகின்றன.தமிழ் நோக்கு நிலையில் இருந்து அல்ல.