பிரான்சில் வசித்து வரும் பிரித்தானியாவைச் சேர்ந்த 11 வயதான சிறுமியொருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் பிரிட்டனி பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், 71 வயது மதிக்கத் தக்க நெதர்லாந்தைச் சேர்ந்த பிரஜையொருவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வீட்டுப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதன்போது திடீரென அங்கு வந்த நெதர்லாந்துப் பிரஜை அவர் மீதும் அவரது தந்தை மீதும் கண் மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுமி உயிரிழந்ததாகவும், அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபரையும் அவரது மனைவியையும் கைது செய்த பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.