நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதே சமயம் உக்ரேனும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கு இடையேயும் இடம்பெற்றுவரும் போரானது உக்கிரமடைந்து வருகின்றது.
குறிப்பாக நேற்றைய தினம் உக்ரேனின் Kryvyi Rih நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் உக்ரேன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ”உக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு மாறாக உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்தேய நாடுகள் நிறுத்த வேண்டுமென்றும்” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிபந்தனையொன்றை விதித்துள்ளார்.
நேற்றைய தினம் மொஸ்கோவில் இடம்பெற்ற இராணுவ சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ரொக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணையை உக்ரேன் தகர்த்துள்ளதாக குற்றம்சாட்டிய புடின், எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தியபிறகு ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரேனுக்கு 10 மடங்கு உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.