சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (15) ஹக்மன நரவெல்பிட வடக்கு போதிருக்காராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை, தங்க வேலியுடன் கூடிய புனித அரச மரத்தை சுற்றியுள்ள சுவர் மற்றும் சம்புத்த சாசனத்தின் முதல் அறுபது அரஹத் தேரர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”நரவெல்பிட போதிருக்காராம விகாரை ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டப்பட வேண்டும். வரலாறு முழுவதும், நாடு முழுவதும் கிராமம் கிராமமாக பௌத்த சாசனத்தை நிலைநிறுத்துவதற்காக பல்வேறு அரசாங்கங்கள் திட்டமிட்டு உழைத்துள்ளன. மகா சங்கத்தினரும் கிராம மக்களும் நாட்டு மக்களும் அதற்கு பெரும் பக்க பலமாக இருந்துள்ளனர். அத்தகைய சக்தியை வழங்கும் நாகரீகத்திற்கு நாம் சொந்தக்காரர்கள். நாகரீக உலகை வியக்க வைக்கும் தனித்துவம் எமக்கு இருக்கிறது. உலகையே வியக்க வைக்கும் விகாரைகளைக் கொண்ட பூமி என்ற பாரம்பரியம் எமக்கு உண்டு.
சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஒரு காலம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமது விகாரைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மகாசங்கத்தினர் பெரும் அசெளகரியங்களை சந்தித்தனர். வரலாறு இதற்கு சாட்சியாக உள்ளது. இத்தகைய யுகத்தில், சாசனத்தை பாதுகாக்க மகாசங்கத்தினர் பாடுபட்டனர். தற்போதைய மகாசங்கக்தினரும் அதுபோன்ற அர்ப்பணிப்பை செய்துவருகின்றனர்.
நம்பகமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கத் தேவையான அமைதியான தேசத்தை வலுப்படுத்தும் பயணத்தில் இதுபோன்ற சிறந்த பணிகள் நாட்டிற்குத் தேவை. பௌத்தர்களும், நாட்டு மக்களும் வெசாக் பண்டிகையை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடினர். புனித நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும். எமது நாட்டில் கலைஞர்களும் எழுத்தாளர்களும் உருவானது அது போன்ற சந்தர்ப்பங்களால்தான் ” என்றார்.