மத்திய மாகாணத்தில் அண்மைக்காலமாக நாய்களுக்குப் பரவி வரும் அடையாளம் காணப்படாத வைரஸ் தொற்றுப் பரவலானது, தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் டாக்டர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கண்டி, நுவரெலியா ,மாத்தளை கம்பளை, ஹட்டன், பேராதனை, கினிகத்தேன மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் இந்நோய் பரவி வருகின்றது.
இம் மாவட்டங்களில் எட்டு மாதங்களுக்கும் குறைவான நாய் குட்டிகளுக்கு இத்தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட குட்டிகள் சுவாசக் கோளாறுகள் (சுவாசப் பிரச்சனைகள்), வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகளின் நிறமாற்றம், பசியின்மை மற்றும் சோம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன
குறிப்பாக ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ் மற்றும் லாப்ரடோர் போன்ற கலப்பு இன நாய்களிடையே இத்தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிகளுக்கு உறைந்த உணவுகளை ஊட்டுவதைத் தவிர்க்குமாறும் 4 அல்லது 5 மாதங்களுக்கு குளிப்பாட்டுவதைத் தவிர்க்குமாறும் ”வைத்தியர் சாகரதிலக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.