உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதே சமயம் உக்ரேனும் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையேயும், இடம் பெற்றுவரும் போரானது உக்கிரமடைந்து வருவதால், இப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையொன்றை நடத்த ஆபிரிக்கத் தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
இக்குழுவில் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா உட்பட ஜாம்பியா, செனகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு மற்றும் கொமோரோ தீவுகள் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:- ஆக்கிரமித்துள்ள உக்ரேன் பிராந்தியத்தில் இருந்து ரஷ்யப் படையினர் வெளியேறிய பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு உண்மையான அமைதி தேவை. அதற்கு எங்களது நிலத்தில் இருந்து ரஷ்யப் படையினர் உண்மையாகவே வெளியேற வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையயில் ஆப்பிரிக்கத் தலைவர்கள் இன்று ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.