ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் அண்மைய வாரங்களாக இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் அமைச்சுப் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியமையே அமைச்சவை மாற்றம் தாமதமாவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்புகளில், சில குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குமாறு ராஜபக்ச மற்றும் அவரது தரப்பினரால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
எவ்வாறாயினும் தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் செயற்படக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அமைச்சுக்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சில முக்கிய அமைச்சுக்களின் ஏற்பட்டுள்ள ஏமாற்றம் மற்றும் சில அமைச்சர்கள் செயற்படத் தவறியதைத் தொடர்ந்து அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்திய மாதங்களில், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் நெருக்கடி அதிகரித்துள்ளது, குறிப்பாக இது அரச வைத்தியசாலைகளில் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் வலியுறுத்தியுள்ளது.