13ஆவது ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது, சிம்பாப்வேயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், நேற்றைய தினம் நடைபெற்ற குழு ‘பி’பிரிவின் 8 ஆவது போட்டியில், ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்துக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கர்டிஸ் கம்பர் 120 ஓட்டங்களையும் டொக்ரெல் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதனால், ஸ்கொட்லாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குழு பி பிரிவில் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி 2 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதன்போது, ஸ்கொட்லாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மைக்கேல் லீஸ்க் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களையும் கிறிஸ்தோபர் மெக்பிரைட் 56 ஓட்டங்களையும்; பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்க் அடாயர் 3 விக்கெட்டுகளையும் ஜோசுவா லிட்டில் மற்றும் ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கர்டிஸ் கம்பர் மற்றும் பெஞ்சமின் வைட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஸ்கொட்லாந்து அணி சார்பில், 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மைக்கேல் லீஸ்க் தெரிவுசெய்யப்பட்டார்.
ஸ்கொட்லாந்து அணி, தனது இரண்டாவது போட்டியில், நாளை ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்ளவுள்ளது.