கடந்த சில மாதங்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதாள உலகக் கும்பல்களிடையே இடம்பெற்றுவரும் போட்டியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
குறிப்பாக நேற்றைய தினம் ஹோமாகம, கொஸ்கம மற்றும் கொட்டாவ ஆகிய இடங்களில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுக்க பொலிஸார் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகா் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அண்மையில் இடம்பெற்ற பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் பாதாள உலகம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவையாக உள்ளன.
“சில சம்பவங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தமது போட்டியாளர்களுக்கு எதிராக இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.