டைட்டானிக்கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட titan என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
‘ஓஷன்கேட்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் மூழ்கிக் கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 செல்வந்தர்கள் கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை டைட்டன் இழந்தது.
இதனையடுத்து தேடுதல் பணியானது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் titan னின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது.
இதனையடுத்து நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் ஐவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது.
கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி 22,00பேருடன் பயணித்த டைட்டானிக் கப்பலானது அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிமலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிதைவுகளைப் பார்வையிடச் சென்ற 5 பேரும் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.