யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறிருக்கையில் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் எதற்காக இவ்வாறு வழமைக்கு மாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட போது தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எந்தவொரு விடயமும் தெரிவிக்கப்படவில்லை.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும், மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்கவும் தேசிய கடன் மறுசீரமைக்கப்பட மாட்டாது என்றே ஆரம்பம் முதல் தெரிவித்து வந்தனர்.
ஆனால் தற்போது வங்கிகளையும், பங்குசந்தைகளையும் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக மூடி இது குறித்த யோசனையை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எந்த வகையான விசேட சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதில்லை.
வடக்கு, கிழக்கு யுத்தம் அல்லது ஜே.வி.பி. இனக்கலவரத்தின் போது கூட ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை. அவ்வாறு இதில் என்ன சிறப்பம்சம் காணப்படுகிறது? அரசாங்கம் எதை மறைக்க முயற்சிக்கிறது?
கட்சித் தலைவர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் வழமைக்கு மாறான தினத்தில் இடம்பெறுகிறது.
தேசிய கடன் மறுசீரமைப்பிலுள்ள இரகசியம் என்ன?
மக்களையும் நாடாளுமன்றத்தையும் ஏமாற்றி அரசாங்கம் ஏதேனும் பாரதூரமான தீர்மானத்தை எடுக்கவுள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இது தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் அறியாமல் எம்மால் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
இவ்வாறு அரசாங்கத்துக்கு அதன் போக்கில் செயற்பட இடமளிக்க முடியாது.
அரசாங்கத்துக்கு நிலையான கொள்கையொன்று இல்லை. ஆனால் எதிர்க்கட்சியான நாம் ஸ்திரமான நிலைப்பாட்டுடன் செயற்படுவோம்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பவற்றிடமிருந்து 40 வீதமும், வங்கிகளிடமிருந்து 40 சதவீதமும் அரசாங்கம் கடன் பெற்றுள்ளது.
இவை தொடர்பில் அரசாங்கம் என்ன தீர்மானங்களை எடுக்கும் என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.