புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அதில் இலங்கையில் பொலிஸ் மா அதிபரின் வகிபாகம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், பொது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் போன்ற பொறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மிகவும் முக்கியமான பங்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26, 2023 அன்று முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிதுந்த ஜயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் உள்ளனர் எனப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பணிப்பாளராக கடமையாற்றிய போதே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
இத்தாக்குதலில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான அப்பாவி மக்கள் உயிர்களையும் அவயவங்களையும் இழந்தனர்.
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.