தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற பொய்யான கருத்தை வெளியிட கூடாது என்றும் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொய்யான வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், ஜனாதிபதி அவர்களே. இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.
20 வீதமான மக்கள் நாட்டின் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். 80 வீதமான மக்களுக்கு சரியான உணவைப் பெற முடியவில்லை.
கொழும்பு துறைமுகம் டிகோவிட்ட வரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது அரசாங்கம் துறைமுகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது.
தற்போதுள்ள துறைமுகம் துண்டு துண்டாக விற்கப்படுகிறது. இந்த மனிதன் என்ன கனவு காண்கிறான்? அவருடைய இலக்கு என்ன? இதுதான் இலக்கு.
முத்துராஜவெல முழுவதையும் அழித்துவிட்டு, இவற்றை வெளியூர்களுக்கு விற்று, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாகச் செத்துவிடுவார்கள்.
நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிச்சமாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கை தொடருமானால் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.