”உணவருந்திவிட்டு அதற்குறிய பணத்தை வழங்க மறுப்பவர்களின் முகத்தில் வெந்நீரை அல்லது கழிவு நீரை ஊற்றுங்கள்” என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் சமன் டி சில்வாவுக்கும் பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றின் ஊழியர்களுக்கு இடையிலும் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள், உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்டாம். சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டே உணவுகளைத் தயார் செய்கின்றனர். எனினும் அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தாம் உண்கொண்ட உணவுக்கு பணம் வழங்குவதில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடகர் சமன் சில்வா மற்றும் குழுவினர் கடந்த சனிக்கிழமை (01) இரவு பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று உணவருந்தியுள்ளனர். இதன்போது சில்வாவுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் , அவர் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் உணவகத்தின் ஊழியர்கள் பலர் காயமடைந்ததுடன், உணவகத்தில் இருந்த சில பொருட்களும் சேதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.