நாட்டில் விற்பனைக்காக இருக்கும் மருந்துப் பொருட்களின் உற்பத்திப் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்புடைய தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் விற்பனைக்காக இருக்கும் மருந்துப் பொருட்களின் உற்பத்திப் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனுக்கான தொடர்புடைய தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்து, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் பணியாகும்.
எவ்வாறாயினும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் நிர்வாகிகள் அந்நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களை விடுவித்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, உகந்த மருந்துகள் ஒழுங்குமுறை செயல்முறை இல்லாத காரணத்தால், தரமற்ற மருந்துகள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய செயல்களின் விளைவாக, சிலர் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவே, மக்களின் சுகாதார விடயத்தில் அதிக கவனம் செலுத்தி, அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.