புதிய அபிவிருத்திகளையோ முதலீடுகளையோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடன் பெற்றுக் கொண்டு கடனை அடைப்பதுதான், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது.
500 பில்லியன் டொலர் கடனை மீண்டும் பெற்றுக் கொண்டே, நாடு பொருளாதார ரீதியாக வலுவடைந்து வருவதாக இவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாறாக, புதிய அபிவிருத்திகளையோ முதலீடுகளையோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
நேற்றும் உலக வங்கியிடமிருந்து 250 பில்லியன் டொலர் கடன்தொகை கிடைத்தது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் கடன் கிடைக்கவுள்ளது.
பெற்றுக் கொண்ட கடன்களுக்கான வட்டி வீதங்களை செலுத்த ஒரு 13 பில்லியன் அளவில் வருடத்திற்கு தேவைப்படுகிறது.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு இணங்க இறக்குமதி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் நாட்டுக்கு வெளியே மீண்டும் டொலர் செல்ல ஆரம்பித்துவிடும்.
இதற்கிடையில், ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சியடைந்தால் பாரிய நிதித்தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீண்டும் நாட்டில் பொருளாதார தட்டுப்பாடுதான் ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.