சிறுவர்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துக்கு கோபா குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண, அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் 2019/2020/2021 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயலாற்றுகை தொடர்பில் ஆராயும் நோக்கில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் அண்மையில் (04) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அமைச்சர் இவ் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ”பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் அடையாளம் காண்பதற்குத் தகவல் கட்டமைப்பொன்றைப் பேணுவது மிகவும் முக்கியமானது. இதனால் இது பற்றிய தகவல்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையேனும் பாடசாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு தகவல் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். எனவே, இது தொடர்பில் கல்வி அமைச்சு வேலைத்திட்டமொன்றைதயாரிப்பது அவசியமானது என்றும், பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் தொடர்பில் விரைவாகக்கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2350000 ரூபா செலவில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழுவுக்கு பிந்திய மற்றும் பிழையற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக 2018ஆம் ஆண்டு இந்தத் திணைக்களத்துக்கு வழங்கிய UNCRC தகவல் கட்டமைப்பைப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளமை குறித்தும் இங்குகவனம் செலுத்தப்பட்டது. இந்தத் தகவல் கட்டமைப்பில் நடைமுறைச் சிக்கல்கள் சில இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய தகவல் கட்டமைப்பை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சிறுவர்கள் தொடர்பான சம்பவங்களை ஊடகங்கள் மூலம் வெளியிடும் போது சிறுவர் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது, குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக எவ்வாறு செயற்படுவது, இணையத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் பெறப்படும் முறைப்பாடுகளை விசாரிப்பதில் தாமதம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், கௌரவ டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.