ஒரு இரவில் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடையவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு இரவில் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடையவில்லை.
2005 இலிருந்து 2015வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 7.2 ஆக உயர்ந்துக் கொண்டுதான் இருந்தது.
2015 இலிருந்து 2019 வரையான தற்போதைய எதிர்க்கட்சியினரின் ஆட்சிக் காலத்தில்தான், 2.1 ஆக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது.
14.5 பில்லியன் டொலரை இவர்கள் அன்று கடனாகப் பெற்றார்கள்.
அப்போது கொரோனா பிரச்சினையோ, ஈஸ்டர் தாக்குதல் சர்ச்சையோ, போராட்டங்களோ, ரஸ்யா- உக்ரைன் யுத்தமோ இடம்பெறவில்லை.
எனவே, நல்லாட்சி அரசாங்கத்தினரும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
பொய்யான கதைகளைக்கூறி, கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை இவர்கள் இடைநிறுத்தினார்கள்.
இடைநிறுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர்தான் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
எவ்வளவு முதலீடுகள் இதனால் பாதிக்கப்பட்டன? எனவே, இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது.
40, 50 வருடங்களாக நாட்டில் இருந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளின் விளைவாகத்தான் இன்று பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.