நாட்டில் 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு சர்வதேசம் முன் வர வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
கனடா இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 13 வது சீர்திருத்தத்தை அமுல் செய்து அதற்கான வேலை திட்டங்களை முன்னெடுக்குமாறு கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்,அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் 13ஆம் திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல எனபதால், புதிய சட்டங்களை அமைப்பதற்கு முன்னர் 13-ஆம் திருத்த சட்டத்தையும் 16 ஆம் திருத்த மொழியுரிமை சட்டத்தையும் அமுல்படுத்த ஜனாதிபதியிடம் கனடா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், நாட்டில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் நாம் இடமளிக்க போவதில்லை என கனேடிய வெளி விவகாரம் அமைச்சின் தெற்காசிய வெளிவிவகார பணிப்பாளர் ந நாயகத்திடமும் இலங்கைக்கான கனேடிய தூதுவரிடமும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி, சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா ரத்தின வடிவேல், கனேடிய தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.