இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒருபகுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் மோகன் குவத்ரா இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் எதிர்கால பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை நோக்கி செயல்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார செயலாளருக்கு விளக்கமளித்தார்.
சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது அண்டை நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வந்தமைக்கு இதன்போது நன்றி தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மற்றும் விஜயத்தின் போது திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.
இதேநேரம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியான சாகல ரத்நாயக்காவுடனும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலந்துரையாடினார்.