நீதிபதிகள் தொடர்பாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இன்று, வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகளால் பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவரும் ஆளும் தரப்பு நாடாமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, கடந்தவாரம் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தானது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு என்பதை மறந்துவிட வேண்டாம் என்று முல்லைத்தீவு நீதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையில் இவர் வெளியிட்டிருந்த கருத்து, நாட்டின் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு, இன்று வடக்கு- கிழக்கு மாகாணங்களில் சட்டத்தரணிகள், பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 சட்டத்தரணிகள் இந்;த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில், இன்று யாழ். மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் இன்று பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள், பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேநேரம், மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகளும் இன்று பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் இந்த பணிபகிஸ்கரிப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகளின் இந்தப் போராட்டம் காரணமாக இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.