சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுவீடனின் தலைநகர் ளுவழஉமாழடஅ யில் துருக்கி தூதரகத்துக்கு முன்னால் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது சுவீடன் – டென்மார்க் வலதுசாரி அரசியல்வாதியான ரஸ்முஸ் பலுதான் புனித குர்ஆனை எரித்தார்.
இச்சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் , துருக்கி, கட்டார், இந்தோனேஷியா, சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈராக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் சுவீடனின் பிரதமர் Ulf Kristersson; இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
‘கருத்துச் சுதந்திரமானது எமது ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ளது. ஆனால், சட்டபூர்வமான ஒன்று பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதல்ல. பலருக்கு புனிதமானதாக உள்ள நூல்களை எரிப்பது அவமரியாதையான செயற்பாடு’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ், பலருக்கு புனிதமானதாக உள்ள நூல்களை எரிப்பது மிகவும் அவமரியாதைக்குரிய செயற்பாடு. இது வெறுக்கத்தக்கது’ என கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு அதன் அங்கத்துவ நாடான துருக்கியின் ஆதரவை சுவீடன் கோரியுள்ளது.
இந்நிலையில், புனித குர் ஆன் எரிப்பு நடவடிக்கையானது துருக்கிக்கும் சுவீடனுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த விரும்புவர்களின் சதியாக இருக்கலாம் எனவும் நெட்பிரைஸ் மேலும் தெரிவித்துள்ளார்.