டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவது கடினமாகும்.
ஆனால், டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு 22000 ரூபா உதவித்தொகையுடன் பணியமர்த்தப்பட்டனர்.
180 நாள் சேவை நாட்களுக்குள் இந்த அரச அதிகாரிகளை நிரந்தரமாக்கல் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தும் அது அவ்வாறு அமுல்படுத்தப்படவில்லை.
இதனால் 1105 அதிகாரிகள் சேவையை கைவிடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் உரிமைகளுக்காக எதிர்காலத்திலும் போராட நாம் தயாராகவே உள்ளோம்.
இவர்களின் சேவையை நிரந்தரப்படுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விருப்பம் தெரிவித்த போதிலும், அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் இதேபோன்ற பல அமைச்சரவைப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஜனாதிபதியும், அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இவர்களின் நியமனங்களை நிரந்தரமாக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.