தாய்லாந்தில் ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, அவரது சடலம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஹான்ஸ்-பீட்டர் ரால்டர் மேக் என்ற 62 வயதான நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பட்டயா நகரில் தனது 24-வயதான மனைவியுடன் வசித்து வந்த மேக்,கடந்த 4ஆம் திகதி வியாபார விடயமாக வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பவில்லை எனஅவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் அதிகபடியான பணம் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் மேக் பயன்படுத்திய கறுப்பு நிற பென்ஸ் காரானது நாங் ப்ரூ நகரில் உள்ள அவரது வாடகை வீட்டுக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்துப் பொலிஸார் குறித்த வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டியொன்றில் இருந்து துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டிருந்த மேக்கின் சடலத்தைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார், கொலையாளி யார் என்பது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.