மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதையை புனரமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்தால், வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தடைபடலாம் .
அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் புனரமைக்கப்பட்ட ரயில் பாதை கடந்த வியாழக்கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் ரயில் சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதையின் புனரமைப்பு நடவடிக்கைகள் இந்திய நிதியுதவியுடன் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் புனரமைப்பு காரணமாக, வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் அநுராதபுரத்திலிருந்து ஓமந்தைக்கும் இடையில் நேற்று வெள்ளோட்டத்திற்காக 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் வண்டி பயன்படுத்தப்பட்டது.
வடக்கு மார்க்க ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததன் மூலம் காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் குறையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.