” இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில நீதிபதிகளும் செயல்படுகிறார்கள். குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத் தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.” இது கடந்த ஜூலை 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
ஆனால் அவர் அவ்வாறு உரையாற்றிய அதே காலப்பகுதியில்தான் பௌத்தப்பிக்குகள் பெண்களோடு காணப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. பௌத்தம் அதிகம் கர்மாவை வலியுறுத்தும் ஒரு மதம். அந்த கர்மாதான் இப்படி ஒரு காலத்தில் அதுவும் சரத் வீரசேகர ஒரு நீதிபதியை அவமதித்த காலகட்டத்தில் பிக்குகளின் லீலைகளை வெளியே கொண்டு வந்ததா? என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் இதுவிடயத்தில் பிக்குக்களின் மீது மட்டுமல்ல எல்லா மதப் பிரிவுகளையும் சேர்ந்த சில மத குருமார்களின் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் உண்டு. உலகில் உள்ள எந்த ஒரு ஸ்தாபிக்கப்பட்ட மதப் பிரிவும் தன்னுடைய மதகுருக்கள் அனைவரும் உண்மையான சன்னியாசிகள் என்று பிரகடனப்படுத்த முடியாத ஒரு நிலைமைதான் உண்டு. ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரையிலும் இங்கு தேரவாத பௌத்தம் எனப்படுவது ஓர் அரச மதம். அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்று. மொழி, மதம், இனம், நிலம் ஆகிய நான்கையும் இணைத்த போதுதான் இனப் பிரச்சினை கருக்கொண்டது என்ற ஒரு வாதமும் உண்டு. எனவே இந்நாட்டின் பௌத்தம் என்பது ஏற்கனவே அரசியல் ரீதியாக அதிகம் சர்ச்சைக்குள்ளாகிய ஒன்று. சில நாட்களுக்கு முன் குருந்தூர் மலையில் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் சிங்கள பௌத்தத்தின் பாதுகாவலனாக நின்று ஒரு தமிழ் நீதிபதியை அவமதித்த அதே காலப்பகுதியில் பிக்குக்களின் லீலைகள் வெளியே வர தொடங்கியுள்ளன.
இது கைபேசிகளின் காலம் அதோடு காணொளிகளின் காலமும். ஒரு சிங்கள ஊடகவியலாளர்-அவருடைய பெயர் எனக்கு மறந்து போய்விட்டது-பல ஆண்டுகளுக்கு முன் “கொழும்பு டெலிகிராப்பில்” எழுதினார்….”மனிதன் இப்பொழுது ஒரு நடமாடும் கமரா” என்று.உண்மை.கைபேசியின் வருகைக்குப்பின் மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். நித்தியானந்தாவின் படுக்கை அறைக்குள் கமரா நுழைந்த பின்னர்தான் கைபேசிக் கமரா அரங்கினுள் வந்தது.
அதே சமயம் கைபேசிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கைத்தீவைக் கூறலாம். இறுதிக்கட்டப் போரில் வெற்றிக் களிப்பில் களத்தில் நின்ற சிப்பாய்களும் அதிகாரிகளும் எடுத்த படங்கள்தான் அவர்களைப் பின்னர் காட்டிக் கொடுத்தன. அப்படங்களில் பெரும்பாலானவை கைபேசிகளில் எடுக்கப்பட்டவை. குறிப்பாக மே 18 க்குப் பின் தமிழ்த் தரப்பில் யாரும் அங்கே படமெடுக்கும் நிலைமை இருக்கவில்லை. மாறாக தமிழ்த் தரப்பு படம் எடுக்கப்படும் ஒரு தரப்பாகத்தான் காணப்பட்டது. அவ்வாறு தமிழ்த் தரப்பைப் படம் எடுத்த படைத்தரப்பிடம் இருந்து ஏதோ ஒரு விதத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட காணொளிகள்,ஒளிப்படங்கள்தான் பின்னாளில் அப்படைத்தரப்புக்கு எதிரான சாட்சியங்களாக மாற்றப்பட்டன. “சனல் நாலு2 ஊடகத்தில் வெளிவந்த பெரும்பாலான காணொளிகளும் ஒளிப்படங்களும் அத்தகையவைதான்.இத்தகைய பொருள்படக்கூறின் இலங்கைத்தீவை கைபேசியால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு நாடு எனலாம்.
அங்கேயும் கர்மா இருக்கிறது. அந்த கைபேசிகள் அனைத்தும் சிங்களத் தரப்பினுடையவை என்பது.
இப்பொழுது பிக்குகளை பற்றிய கைபேசி காணொளிகள் வெளிவர தொடங்கியுள்ளன.அவை சிங்கள பௌத்தத்தை விமர்சிப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகளை கொடுத்துள்ளன.குறிப்பாக சரத் வீரசேகர போன்றவர்களின் வாயை அடைக்க அவை உதவுமா?
நிச்சயமாக இல்லை. சரத் வீரசேகரபின் கருத்தை எதிர்த்து சட்டவாளர்கள் சங்கம் அறிக்கை விட்டுள்ளது. அதற்கு சரத் வீரசேகர என்ன பதில் கூறியிருக்கிறார் தெரியுமா? “வடக்கில் எமது பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுவது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.தொல்பொருள் சின்னங்களை மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுப்பட்ட தொல்பொருள் அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பொய்யான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனால் தொல்பொருள் மறுசீரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாம் அனைவரும் நீதித்துறையை மதிக்கிறோம். எமது மரபுரிமைகளை அழிக்கும் குண்டர்களுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு முன்னர் சட்டத்தரணிகள் இருமுறை சிந்திக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேசப்பற்று இருக்குமாயின் அவர்கள் இவ்விடயத்தையும் கவனிக்க வேண்டும்” இவ்வாறு சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அதாவது அவர் தனது செயலை நியாயப்படுத்துகிறார். கடைசியில் தேசப்பற்றைக் கையில் எடுக்கிறார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டின் மீ உயர் மன்றத்தில் ஒரு தமிழ் நீதிபதியை அவமதித்தமை வெளியுலகத்துக்கு இரண்டு விடயங்களை மிகக் கூர்மையான விதங்களில் வெளிப்படுத்துகின்றது.
முதலாவது,பன்னாட்டு நாணய நீதியத்திடமும் மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும் இலங்கை அதிகம் தங்கியிருக்கும் ஒரு காலகட்டத்தில்கூட, சிங்களபௌத்த மயமாக்கல் எந்தளவுக்கு முழுவேகமாக முன்னெடுக்கப்படுகிறது என்பதனை அது காட்டுகின்றது. சில நாட்களுக்கு முன் குருந்தூர் மலையில் நடந்தமை அதற்கு ஆகப்பிந்திய எடுத்துக்காட்டு.
இரண்டாவது, நாட்டின் உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்பின் சுயாதீனத்தை தமிழ்மக்கள் ஏன் சந்தேகிக்கிறார்கள் என்பதனை அது நிரூபிக்கின்றது.நாட்டின் உள்நாட்டு நீதிபரிபாலானக் கட்டமைப்பின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்குள் உலக சமூகத்தில் இரண்டு துலக்கமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாவது, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான அதாவது பொறுப்பு கூறலுக்கான ஐநா தீர்மானம். நிலை மாறுகால நீதி என்ற ஓர் அனைத்துலகை ஏற்பாட்டை ஏன் நாட்டுக்குள் ஸ்தாபிக்க வேண்டி உள்ளது? ஏனெனில் உள்நாட்டு நீதியின் போதாமைதான் காரணம். இது முதலாவது.
இரண்டாவது, கனடாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு ராஜபக்சக்களுக்கு எதிராகவும் இரண்டு படை அதிகாரிகளுக்கு எதிராகவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள இரண்டு படை அதிகாரிகளும் ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள். அதேபோல அமெரிக்கா இரண்டு படைப்பிரதானிகளுக்கு எதிராக தடை விதித்திருக்கிறது.அவர்கள் இரண்டு பேருமே இலங்கைத்தீவில் உயர் பொறுப்புகளை வகித்தவர்கள். அதாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபரிபாலனக் கட்டமைப்பினால் தண்டிக்கப்படாதவர்கள், அல்லது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களை, அமெரிக்காவும் கனடாவும் தண்டித்திருக்கின்றன. இது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலன கட்டமைப்பை வெளி உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு இரண்டாவது துலக்கமான உதாரணம்.
இந்த இரண்டு துலக்கமான உதாரணங்களோடு மூன்றாவதாக சரத் வீரசேகரனின் நாடாளுமன்ற உரையும் சேர்கிறது. ஒரு தமிழ் நீதிபதிக்கு நடந்த அவமதிப்பு அதுவும் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பான ஒரு வழக்கில் நடந்த அவமதிப்பு என்று பார்க்கும்போது, இலங்கைத்தீவில் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் சுயாதீனத்தை ஏன் தமிழ்மக்கள் சந்தேகிக்கிறார்கள்? குறிப்பாக,பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புகள் என் ஏற்றுக்கொள்ளவில்லை? என்பதற்கு இது ஆகப்பிந்திய, துலக்கமான ஓருதாரணம் ஆகும்.