தரமற்ற மருந்துகளைக் கொண்டுவந்து, மக்கள் உயிரிழப்புக்கு காரணமான தரப்பினர், இதிலிருந்து தப்பிக்க, குறித்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீதுதான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை அரசாங்கம் கொண்டுவந்ததன் விளைவாக, இன்று பலர் உயிரிழந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு பொருப்புக்கூற வேண்டியது யார்?
இந்த மருந்துகளை செலுத்திக் கொண்ட ஏனையோர் உயிரிழக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
அப்படியென்றால், இந்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் அனைவரும் உயிரிழக்க வேண்டும் என்றா அவர் நினைக்கிறார்?
இன்னுமொரு பேராசிரியர், மருந்தை செலுத்தியது கெஹலியவா என்று கேள்வி கேட்கிறார்.
இறுதியாக மருந்தை நோயாளிக்கு உட்செலுத்தியவர் மீதுதான் தவறு என்று, கூற இந்தத் தரப்பினர் முனைகிறார்கள்.
இதனால்தான் சுகாதார சேவை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. கொமிஸ் அடிப்பதற்காக தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தார்கள்.
இவர்களுக்கு மக்களின் உயிர் தொடர்பாக எல்லாம் அக்கரை கிடையாது.
மக்களை சுகப்படுத்துவதைவிட மக்களை கொல்லத்தான் இவர்கள் முற்படுகிறார்கள்.
இன்று மக்களுக்கு வைத்தியசாலைக்குச் செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக எல்லாம் அரசாங்கத்திற்கு எந்தவொரு அக்கரையும் கிடையாது.
பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பாலத்தில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 12 பேர் இதனால் உயிரிழந்தார்கள்.
இந்த பாலத்தை தொடர்ச்சியாக புனரமைக்குமாறு மக்கள் கோரி வரும் நிலையில், இதனை செய்ய நிதி இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆனால், இவர்களுக்கு உலகம் சுற்ற நிதி இருக்கிறது. இதுதான் இன்றைய நிலைமையாகும்.