நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவி, எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு திவால் நிலைமைக்குச் சென்றமைக்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கமானது, மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன்தான் இயங்கி வருகிறது.
இந்த கட்சியின் செயலாளர்தான், நாடு திவால் நிலைமைக்குச் சென்றமை தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ தான், இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர்.
அந்தக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் காணப்படுகிறார்.
நாடு திவாலானமைக்கான உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில், அதே தரப்பிடம் இந்த பொறுப்புக்களை ஒப்படைக்கக்கூடாது.
இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டுமெனில், எதிர்க்கட்சியிடம்தான் தெரிவுக்குழுவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
பொருளாதாரக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களுக்கு பதிலாக வேறு நபர்களின் பெயர்கள்தான் குறிப்பிடப்படும்.
எனவே, உண்மைகள் வெளியே வரவேண்டுமெனில், எதிர்க்கட்சியினருக்கு தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.