உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் தெரிவித்துள்ளார்.
12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம், இயற்கை மரணமா இல்லையா என்பனவே இதுவரை வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது, உயிரிழந்த நபர் தொடர்பிலும் மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் சான்றிதழில் குறிப்பிட வேண்டும் என்பதுடன், மரண விசாரணை அதிகாரிகளால் இறப்புச் சான்றிதழ்களில் பதிவிடப்படவும் வேண்டும்.
மரணத்திற்கான காரணத்தை நான்கு விடயங்களின் கீழ் விரிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இருந்து இடம்பெறும் அனைத்து மரணப் பரிசோதனைகளையும் புதிய இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்